திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக நீதிபதி மோகனா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி மோகனா முன்னிலையில் இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் அனுராதா, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.
அமலாக்கத் துறை அதிகாரியின் வழக்கறிஞர் செல்வம், ஜாமீன் தர உத்தரவிடலாம் என முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து (இன்று) உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கை தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை அங்கித் திவாரியின் ஜாமீன் மனு நீதிபதி மோகனா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.