அரசுப் பணி நியமனங்களுக்கான போட்டி தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், போட்டித் தேர்வுகளையே முற்றாக கைவிட வேண்டும் என திருமாவளவன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
போட்டி தேர்வு, நுழைவு தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, போட்டி தேர்வுகளையே ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கான இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இத்தகைய பொதுத் தேர்வுகள் தேவைதானா? இதனை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே வேண்டுகோள் விடுகிறேன்.
பட்ட வகுப்புகளை முடித்து மாணவர்கள் வேலைவாய்ப்பை தேடுகிற போதும் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் போதும் இப்படிப்பட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்பது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை மன அழுத்தத்தை தருவதாக உள்ளது. முதல் தலைமுறையைச் சார்ந்த கிராமப்புறத்து மாணவர்கள், பெற்றோர் கல்வி வாசனையே அறியாதவர்களாக இருந்து முதன்முதலாக பள்ளியிலும் பல்கலைக்கழகங்களிலும் அடி எடுத்து வைக்கக் கூடியவர்கள் அந்த பட்ட வகுப்பிலே தேர்ச்சி பெறுவதையே ஒரு சாதனையாக கருதுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அரசுத் துறைகளில் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் மீண்டும் தேர்வுகளை எழுத வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்படுகிற போது அவர்களுக்கான வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுவதாகவே உள்ளது. அவர்களுக்கான இந்த வடிகட்டும் முறை என்பது அவர்களை உயர் பதவிகளில் அல்லது வேலை வாய்ப்புகளில் அமர விடாமல் தடுப்பதற்கான ஒரு புதிய யுத்தியாகவே கருத நேர்கிறது.
நுழைவுத் தேர்வு (Entrance Exam), தகுதி தேர்வு (Eligibility Test), போட்டித் தேர்வு (Recruitment Examination) இப்படி அடுக்கடுக்கான அடுத்தடுத்து பல்வேறு தேர்வுகளை அவர்கள் காண வேண்டி இருக்கிறது. ஒருவர் கல்வித் தகுதியை பெறுவதற்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதாகவே கருதுகிறோம். எனவே, இதனை மேலும் இலகுவாக்க வேண்டும். பட்ட வகுப்பிலே தேர்ச்சி பெறக்கூடியவர்களை உரிய துறைகளில் அமர்த்துவதற்கு அந்தந்த பல்கலைக்கழகங்களிலேயே அவர்களை தகுதி படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகள் அல்லது ரயில்வே, பேங்கிங் சர்வீஸ் இவற்றுக்கெல்லாம் தனியார் பயிற்சி நிறுவனங்களை நாட வேண்டி இருக்கிறது. பிரைவேட் கோச்சிங் சென்டர் எல்லாம் இன்றைக்கு வணிகமயமாக்கி இருக்கின்றன. இந்த தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கட்டணம் செலுத்தி படித்தால் மட்டும் தான் அவர்களால் அந்த தேர்வில் வெற்றி பெற முடியும் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. எனவே, பொதுவில் இப்படிப்பட்ட போட்டித் தேர்வுகளை முற்றாக கைவிட வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள். கடந்த கோவிட் கொரோனா காலத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவர்கள் அதற்கான தயாரிப்பை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்கள் மறுபடியும் தங்களுக்கான வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை அரசு பரிசளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.