கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன: அமித்ஷா

லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக நாளிதழுக்கு அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு தொடர்பாக கூறியிருப்பதாவது:-

அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அதிமுக கூட்டணி தொடர்பாகவும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். நாட்டில் யாரும் கட்சியை (நடிகர் விஜய்) தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். அதே நேரத்தில் யாருக்கு வாக்குகள் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் ஏற்கனவே தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் கிடைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கொண்ட முயற்சி நல்ல முயற்சியாகும்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னமும் தயாராகிவில்லை. நாட்டில் தமிழ்நாடும் மிக முக்கியமான மாநிலம். தமிழ்நாட்டுக்கான நிறைய திட்டங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பாஜகவின் மிக நெருங்கிய கூட்டணி கட்சியாக இருந்து வந்தது. மத்திய அரசின் சிஏஏ உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களில் அதிமுக, பாஜகவை முழுமையாக ஆதரித்தது. தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக, பாஜக உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி, பாஜகவின் அண்ணாமலைதான் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சுகள் அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது. அத்துடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா திமுகவின் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்து முன்வைத்த விமர்சனங்களும் அதிமுகவினரை கொதிப்படைய வைத்தது. இதனால் பாஜகவுடனான கூட்டணியையே முறித்து கொள்வதாக அண்ணா திமுக அறிவித்தது. இருந்த போதும் இந்த கூட்டணி முறிவு நாடகம் என திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது. அதிமுகவோ தொடர்ந்து பாஜகவை விமர்சித்து கொண்டிருக்கிறது. பாஜக இதுவரை அதிமுகவை தமது அணிக்கு வர ஒரு பக்கம் முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.