“பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” என பிரதமர் மோடி பேசினார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடி இந்தக் கருத்தை முன்வைத்தார். மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) ஆற்றிய உரையில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியவர். பிரதமராக இருந்த நேரு, மாநில முதல்வர்களுக்கு எழுதிய அக்கடிதத்தில், “பணிகளில் எவ்வித இடஒதுக்கீட்டையும் நான் விரும்பவில்லை. அதனை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் நான் எதிர்க்கிறேன். இடஒதுக்கீடு திறனின்மையை ஊக்குவிக்கும். அது சாதாரணமானவர்களை பணியில் அமரவைக்கும்” என்று குறுப்பிட்டதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.
“பணியில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் அது அரசாங்கப் பணிகளின் தரத்தை குறையச் செய்யும்” என்று நேரு கூறியிருக்கிறார். நேரு வேலைவாய்ப்பில் பட்டியல் / பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டை தீர்க்கமாக எதிர்த்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்காத காங்கிரஸ் சமூக நீதி பற்றி உபதேசம் செய்யக்கூடாது.
ஓபிசிக்களுக்கு மட்டுமல்ல, பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் காங்கிரஸ் இடஒதுக்கீடு வழங்கியதில்லை. பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்குவதைக் கூட பரிசீலிக்கவில்லை. ஆனால், தங்கள் குடும்பத்தினருக்கு வாரி வழங்கிக் கொண்டனர். இப்போது சமூக நீதி பற்றி பாடம் எடுப்பதும், பிரசங்கம் செய்வதுமாக உள்ளனர். ஒரு தலைவராக எந்த உத்தரவாதமும் இல்லாதவர்கள் “மோடிக்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வி கேட்கின்றனர்” என்று பிரதமர் மோடி பேசினார்.
நேருவின் ஜூன் 27, 1961 கடிதத்தை சுட்டிக்காட்டியே பிரதமர் மோடி இந்தக் கருத்துகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் நேரு, “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தரமான கல்வி சாத்தியப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலையை சாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதைவிட கல்வியை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருப்பதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.