மோடி தான் ஒரு ஓபிசி என்று மக்களிடம் தவறாக சொல்லி வருகிறார்: ராகுல் காந்தி!

பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டவர் வகுப்பு குடும்பத்தில் பிறக்கவில்லை என்றும், தான் ஒரு ஓபிசி என்று மக்களிடம் தவறாக சொல்லி வருகிறார் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி யாத்திரையின் மூன்றாவது நாளில் சிறு உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியாதவது:-

பிரதமர் மோடி பொது பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார். அவர் தெலி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2000-ம் ஆண்டில் குஜராத்தில் இருந்த பாஜக அரசு தெலி வகுப்பை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. இதன்படி மோடி பிறப்பால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. இதனால் தனது வாழ்நாள் முழுவதும் அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கப் போவதில்லை. பிரதமர் இதர பிற்படுத்தப்பட்டவர்களுடன் கை குலுக்கியது இல்லை. ஆனால், பணக்காரர்களை கட்டித் தழுவார். இவ்வாறு ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இன்று வியாழக்கிழமை ஒடிசாவின் ஜார்சுகுடாவிலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் தொடங்கிய இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை கிஷான் சவுக் நோக்கி பயணித்தது. தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் ஒடிசாவிலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்குள் நுழைகிறது.