நாட்டுக்கான மன்மோகன் சிங்கின் பங்களிப்பு மகத்தானது: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்துக்கும், நாட்டுக்கும் மன்மோகன் சிங் அளித்த பங்களிப்பு மகத்தானது என்று மாநிலங்களவையில் நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி – மே 2024 இடையே நிறைவடைகிறது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் புதிய அரசு பதவியேற்ற பிறகுதான் நடைபெறும் என்பதால், பதவிக்காலம் நிறைவடைய உள்ள உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார உரை மாநிலங்களவையில் இன்று (பிப்.8) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

நாட்டையும் நாடாளுமன்றத்தையும் வழிநடத்திச் சென்றதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு மகத்தானது. மிகுந்த உறுதியுடன் நீண்ட காலம் அவர் தனது கடமையை நிறைவேற்றி உள்ளார். நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த பேச்சு எங்கெல்லாம் எழுகிறதோ அங்கெல்லாம், நினைவுகூறப்படும் உயர்ந்த மனிதர்களில் ஒருவராக அவர் இருப்பார். அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும். இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள், மூத்த எம்பிக்கள் மற்றும் ஓய்வுபெறும் எம்பிக்களை வழிகாட்டும் விளக்காகக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற டெல்லி அரசு(திருத்தம்) மசோதா மீதான வாக்கெடுப்பில் தனது வாக்கினை செலுத்த சக்கர நாற்காலியில் மன்மோகன் சிங் வருகை தந்தார். அந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் 29 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தன. ஆனாலும், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதில் அது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த உளவியல் வெற்றி என்றே சொல்ல வேண்டும். முடியாதபோதும்கூட மன்மோகன் சிங் சர்க்கர நாற்காலியில் அவைக்கு வந்து வாக்களித்தது அவரது கடமை உணர்வை வெளிப்படுத்தியது. அவர் யாரை ஆதரித்தார் என்பது அல்ல முக்கியம். என்னைப் பொறுத்தவரை அவர் ஜனநாயகத்தை ஆதரித்தார்.

கார்கே ஜி இங்கே இருக்கிறார். ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும், சிறப்பு விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது. அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டியதற்காக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தார். “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டியதற்காக பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் இப்படித்தான் முன்னேறிச் செல்ல வேண்டும். நல்லதை பாராட்ட வேண்டும். குறைகளை மனதில் கொள்ள வேண்டும்” என மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.