தமிழ்நாட்டுக்கு நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்: உதயநிதி

தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ள நிவாரணம், வரிப்பங்கீடு போன்றவைகளில் தமிழ்நாடு அரசை மத்திய அரசு வஞ்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தென் மாநில அரசுகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளன. மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.5000 கோடி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்திய அரசோ ரூ.450 கோடியை மட்டுமே வழங்கி இருக்கிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்?” என அமைச்சர்கள் கேள்வியெழுப்பினர். இதனிடையே, புயல் நிவாரணத்திற்கு குறைவான தொகை ஒதுக்கியது குறித்து மத்திய அமைச்சர் ஒருவர், “அவர்கள் கேட்டதும் பணம் எடுத்துக் கொடுக்க இது என்ன ஏடிஎம் மா?” என கூறினார்.

புயல் நிவாரண நிதி தொடர்பான மத்திய அமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம் என்று பதில் அளித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் கூறிய கருத்துக்கு எதிராக பாஜகவினரும் மத்திய அமைச்சர்களும் கண்டனத்தை பதிவு செய்தனர். மரியாதை இல்லாமல் பேசுவதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வரிப்பங்கீடு குறித்து பதிவிட்டுள்ளார். மோடி கொடுத்த அல்வா என்றும் என்ற கேப்சனுடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது. ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள். மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, மத்திய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்? உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள் என்று பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.