திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி: எடப்பாடி பழனிசாமி!

“எம்.ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரை, மிக மோசமாக விமர்சித்த நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து அவிநாசியில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தெய்வப்பிறவியான எம்.ஜி.ஆரை ஆ.ராசா எம்.பி. வேண்டுமேன்றே திட்டமிட்டு மிக மோசமாக பேசி உள்ளார். இந்த இயக்கத்தை நிறுவியவர். இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர் தான். அதிமுக மக்களிடத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கும் பொறாமையால் தான், இன்றைக்கு தீய சக்திகள் எம்ஜிஆரை விமர்சிக்கிறார்கள். எம்.ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, தீயசக்தி திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். திமுக நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சி. ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை. வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும் என்பார்கள். மக்கள் வெகுண்டெழுந்தால் ராசா தாக்குப்பிடிக்க முடியுமா? கோடிக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம் இது. எம்ஜிஆரின் தொண்டர்கள் மனதால் காயம்பட்டுள்ளனர்.

கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்தபோது, அவருக்கு உதவுவதற்காக அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திற்காக ’எங்கள் தங்கம்’ என்ற படத்தில் சம்பளம் வாங்காமல், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நடித்துக்கொடுத்தார்கள். அந்த படத்தின் மூலம் சம்பாதித்தது அந்த குடும்பம். கருணாநிதி கடனில் இருந்து தப்பித்ததாக முரசொலி மாறனே சொன்னதாக, முரசொலியில் வந்துள்ளது. எதிரியையும் வாழ வைத்தவர் எம்ஜிஆர். 1967-ம் ஆண்டு எம்.ஜிஆரால் திமுக ஆட்சிக்கு வந்தது. துரைமுருகனை வாழவைத்தவர் தான் எம்ஜிஆர். ஆனால், கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்தவர் தான் ஆ.ராசா. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யத் தெரிந்த கட்சி திமுக. ராசா உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் திருந்தாவிட்டால், மக்கள் உங்களை திருத்துவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழகத்தில் தொடர்ந்து 30 ஆண்டு கால ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டது. நிறைய திட்டக்களை நிறைவேற்றி தந்தோம். உயர்கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை, நாம் நம்முடைய ஆட்சியிலேயே ஈட்டினோம்.

அதிகமான அரசு கல்லூரிகள், 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 7 சட்டக்கல்லூரிகள், வேளாண்மை, பொறியியல் என ஏராளமான கல்லூரிகளை திறந்து, அடித்தட்டு குடும்பங்களின் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்த அரசாங்கம் அதிமுக தான். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்கள் 50 ஆண்டு காலம் போராடி வந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை அதிமுக நிறைவேற்றியது. மாநில அரசு முழுமையாக நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் 10 சதவீத பணிகள் 2 ஆண்டுகாலம் 8 மாதங்களாக திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

6 மாதத்தில் முடித்திருக்கலாம். பவானியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை தடுத்து, இந்த திட்டத்தை என்றைக்கோ கொண்டு வந்திருக்கலாம். தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை கொண்டுவந்தோம். அதுவும் ரத்து செய்த அரசாங்கம் தான் விடியா திமுக அரசாங்கம். திருப்பூர், கோவை, அவிநாசி என அத்தனை கூட்டுகுடிநீர் திட்டங்களையும் நிறைவேற்றியது அதிமுக. நான் கொண்டுவந்த 4-ம் குடிநீர் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நாளை ஸ்டிக்கர் ஒட்டி திறக்க இருக்கிறார். திமுக ஆட்சியில் எந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது? அதிமுக கொண்டுவந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பது திமுகவின் தற்போதைய வேலை. 3 மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.

கோவையில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கொண்டுவந்ததும் அதிமுக தான். திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக இன்றைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இன்றைக்கு திருப்பூர், கோவை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு தொழில் நலிவடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்துறையினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் திமுக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மக்கள், தொழிலாளர்கள் படும் துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் தொழில்நகரம், இன்றைக்கு மோசமாகிவிட்டது. விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. ஸ்பெயினுக்கு சென்ற தமிழ்நாடு முதல்வர் 11 நாட்கள் தங்கியிருந்தார். ஒப்பந்தம் போடப்பட்ட 3 நிறுவனங்களும் தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள். ஈரோடு, தூத்துக்குடி மற்றும் பெருந்துறை நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என மு.க.ஸ்டாலின் இன்றைக்கு ஒரு நாடகம் போட்டுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். தாலிக்குதங்கம், விலையில்லா மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது தான் திராவிட மாடல்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்த அரசு அதிமுகதான். புயல், வறட்சி என இரண்டு நேரங்களில் நிவாரணம் வழங்கியது அதிமுக. குளம், குட்டை, ஏரி அனைத்தையும் சீரமைக்க குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தது அதிமுக அரசாங்கம் தான். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது அதிமுக. தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம் குரல் கொடுத்து நியாயமான விலையை பெற்றுத்தந்தோம். ரேசன் கடையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும், மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். ஆனால் நிறைவேறவில்லை. 3-ல் ஒருபகுதி பெண்களுக்கு தான் உரிமைத்தொகை இன்றைக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசா எம்.பி. போட்டியிடுவார். எம்.ஜி.ஆரை அவதூறாக பேசிய ஆ.ராசா டெபாசிட் இழக்கச் செய்து, அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டில் 39, பாண்டிச்சேரி 1 என மொத்தம் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை குவிக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.