யார் எனது தொகுதியில் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஓட்டு போடுவேன்: விஷால்!

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் எனது தொகுதியில் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஓட்டு போடுவேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதற்காக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய் என அரசியலில் நடிகர்கள் வந்துள்ள நிலையில் நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருவதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகர் விஷால் கூறியதாவது:-

அரசியல் என்பது பொதுப்பணி.. அதாவது சமூக சேவை.. அரசியல் என்பது துறை கிடையாது. சினிமா துறை.. மற்ற துறைகள் போல அரசியல் கிடையாது. பொழுதுபோக்குக்காக வந்துட்டு போற இடமும் கிடையாது. இது வந்து மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்வதே அரசியல். 2026 இல் தேர்தல் வருகிறது. மறைப்பதற்கு ஒன்னும் இல்லை. நான் வரமாட்டேன். இல்லை சொல்லிவிட்டு வராமல் இருப்பது அப்படி எல்லாம் கிடையாது.. அந்த நேரத்தில் அந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுமோ அது தான்.

நான் நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் ஆவேன் என்று நினைத்ததே கிடையாது.. நடிகராக இருந்தேன்.. ராதாரவி சாருக்கு போட்டியாக நிற்பேன் என்று நினைத்ததே கிடையாது.. இதேபோல் நான் தயாரிப்பாளர் சங்கத்தில் நான் நிற்பேன் என்று நினைக்கவே இல்லை.. இதையெல்லாம் அந்த காலகட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவு தான். எனவே அப்போது அந்த நேரத்தில் நீங்கள் இந்த இந்த கேள்விகளை கேட்டால் அதற்கு சரியானதாக இருக்கும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அவர் ஒரு துறையாக பார்க்காமல், பொழுதுபோக்கு என்று பார்க்காமல் மக்கள் பணி செய்தால் மக்கள் பணி என்று பார்த்தால் நிச்சயமாக வரவேற்பேன். விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆரோக்கியமாக அவர் அறிவித்து இருப்பது நல்ல விஷயம் தான். எத்தனையோ விஷயங்களை விஜய் பார்த்து இருப்பார். இதனால் அவர் ஆராய்ந்து தான் இதனை அறிவித்து இருப்பார். உறுதியான ஒரு விஷயத்தை ஸ்டேட்மண்டாக கொடுத்து இருக்கிறார். 2026 இல் அரசியலுக்கு வருகிறார். அவர் அரசியல் வருவதற்கு அவருக்கு நான் ரசிகனாய், நடிகராய், இந்திய குடிமகனாய் வாழ்த்து சொல்கிறேன் என்றார்.

தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அரசியலுக்கு வரும்போது, நீங்கள் அவருடன் கூட்டணி வைத்து போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விஷால் பதில் கூறியதாவது:-

இப்போதே நான் எதையும் சொல்ல முடியாது. முன்பு கூறியது போல தான்.. அந்த நேரத்தில் தான் அது பற்றி சொல்வது சரியாக இருக்கும். இப்போதே கூட்டணி, அரசியல் என்றெல்லாம்.. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான். மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வது தான். எனவே இதற்கு நிறைய கட்சிகள் தேவையில்லை. இப்போது இருப்பதே அதிகம். அதனை தாண்டி ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்பதை இதையும் தாண்டி என்னால் மக்களுக்கு செய்ய முடியும் என்று நம்பி தான். இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலில், நாடு தழுவிய அளவில் எந்தக் கட்சி வெற்றி பெறும், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஷால், “இந்த தேர்தல் முடிவுகள் இழுபறி நிலையாக இருக்காது. கண்டிப்பாக ஒரு கட்சிக்கு பெரிய வெற்றியாக இருக்கும். அது எந்தக் கட்சி என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்தார்.

தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பிரச்சாரம் எல்லாம் செய்ய மாட்டேன். கண்டிப்பாக ஓட்டு போடுவேன். வாக்களித்த பிறகு யாருக்கு ஓட்டு போட்டேன் என உறுதியாகச் சொல்வேன். சொன்னால் ஜெயிலில் போடுவார்கள் என்றெல்லாம் இல்லை. நான் ஏற்கனவே, கேப்டனுக்கு ஓட்டு போட்டேன் என வெளிப்படையாக மேடையிலேயே சொல்லி இருக்கிறேன். யார் எனது தொகுதியில் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஓட்டு போடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.