மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!

‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று சாடியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழத்தல், எல்லைப் பதற்றம், மணிப்பூர் பிரச்சினை போன்றவை குறித்தும் இதுபோன்ற ஆவணத்தை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்த நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த காங்கிஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

அது வெள்ளை அறிக்கை இல்லை, வெள்ளை பொய் அறிக்கை. எங்கள் காங்கிரஸ் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே) நேற்று கருப்பு அறிக்கையை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கைக்கான பதில் அந்தக் கருப்பு அறிக்கையில் உள்ளது. கருப்பு அறிக்கை, அரசின் வெள்ளை அறிக்கைக்கான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.

அரசின் வெள்ளை அறிக்கையில், பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவை பற்றிக் குறிப்பிடப்படவில்லை. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, எல்லைப் பதற்றம் போன்ற விவாகாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் கோரி வருகிறோம். அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

அதேபோல் மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் வலியுறுத்தி வருகிறோம், அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். முன்பு நாங்கள் பணமதிப்பிழப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினோம். அப்போதும் மவுனம் காத்தார்கள். நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. இந்த வெள்ளை அறிக்கையும் மற்றொரு நிகழ்வே (event). எல்.கே.அத்வானி சொன்னது போல அவர் (மோடி) ஒரு நிகழ்வு ஒருங்கிணைப்பாளரே (event manager).

ஊழல் மற்றும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு எதிரான அநீதிகளில் அரசு மவுனம் காக்கிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அவரது ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, தொழில்சாலைகள், எண்ணைய் சுத்திகரிப்பு நிலையங்களை தனியாருக்கு விற்றுவிட்டார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.