எனது தகுதி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா!

எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா, அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைக் கண்டித்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆண்டிமுத்து ராசா வேண்டும் என்றே திட்டமிட்டு எம.ஜி.ஆரை, வாய்கொழுப்பு ஏறி பேசியதை கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது. சில தலைவர்கள் தன் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், எம்.ஜி.ஆர் பொதுமக்களுக்காக வாழ்ந்த தலைவர். அதிமுகவிற்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கினால் பொறாமையால், எம்.ஜி.ஆரை ஆ.ராசா விமர்சித்து இருக்கின்றார். இதனால்தான் தீய சக்தி தி.மு.கவை வேரோடு அழிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சொன்னார். ஆ.ராசாவின் பேச்சு எம்.ஜி.ஆர் அனுதாபிகள், தொண்டர்கள் மனதை வேதனையடைய செய்துள்ளது. ஆ.ராசாவிற்கு நாவடக்கம் தேவை. வீட்டிற்கு அடங்காத பிள்ளை நாட்டுக்கு அடங்குவார் என சொல்வார்கள். மக்கள் வெகுண்டு எழுந்தால் ஆ.ராசா தாக்குப் பிடிப்பாரா? மரியாதை இழந்த மனிதர் ஆ.ராசா. ஆ.ராசா எப்பேர்ப்பட்டவர் என்றால், கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர். விஞ்ஞான ஊழல் செய்யும் கட்சி திமுக. எம்.ஜ.ஆரை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது. ஆ.ராசா இனியாவது உளறுவதை விட்டு விட்டு, நல்லதை பேசி பழக வேண்டும். நீங்கள் திருந்தாவிட்டால், திருத்துகின்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள். நீலகிரி தொகுதியில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுவார். எம்.ஜி.ஆரை அவதூறாக பேசிய ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்ஜிஆரை யார் விமர்சித்தாலும் இதுதான் தண்டனை என்பதை காட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை குவிக்க உழைக்க வேண்டும்.” எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. எடப்பாடி பழனிசாமியின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும், கலைஞர் பற்றியும் என்னவெல்லாம் பேசினார் என்று எல்லாருக்கும் தெரியும். அது சம்பந்தமான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.