சென்னையில் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் பங்கேற்க ஜேபி நட்டா வருகை தரும் நிலையில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுள்ளதால் பாஜக தனியாக ஒரு கூட்டணி அமைக்க ஆயத்தமாகி வருகிறது. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, ஒபிஎஸ் உள்பட சில கட்சிகள் இணையக் கூடும் என்று தெரிகிறது. பாமக, தேமுதிக கட்சிகளின் நிலைப்பாடு தெரியவில்லை. மதில் மேல் பூனையாக இரு கட்சிகளும் உள்ளன. அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லுமா அல்லது பாஜகவுடன் கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியவில்லை. அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வருகை தர உள்ளார். அதற்குள் கூட்டணியை உறுதி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையேதான், பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். சென்னையில் நடைபெறும் அண்ணாமலையின் பாத யாத்திரையில் ஜேபி நட்டா பங்கேற்க திட்டமிட்டார். பாதயாத்திரையில் பங்கேற்று விட்டு கட்சி பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா உரை நிகழ்த்த வைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் ஜேபி நட்டா பாத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை வாலாஜா சாலையில் நடைபெறும் பாத யாத்திரையில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பாஜக நிர்வாகிகள் அனுமதி கேட்டனர். எனினும், ஜேபி நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை செண்ட்ரல் மிண்ட் சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மட்டுமே ஜேபி நட்டா பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.