திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்: அண்ணாமலை!

பொதுமக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பதை திசை திருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில், மீண்டும் ஒரு முறை பொய் கூறி வருகிறார்கள் என திமுகவை விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தென் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகமான நிதி வட மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக, பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எம்.பிக்கள் டெல்லியில் போராட்டங்களை நடத்தினர். மத்திய அரசுக்கு தமிழ்நாடு 1 ரூபாய் கொடுத்தால் வெறும் 26 பைசா தான் திரும்ப வருகிறது என திமுக குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் நிதி பங்கீடு தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மத்திய அரசி நிதி பகிர்வில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பதாக திமுகவினர் கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலையின் பதிவில் கூறியுள்ளதாவது:-

2014 முதல் 2022 வரை கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு 2.77 லட்சம் கோடி. மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய உதவித் தொகை, 2.30 லட்சம் கோடி ரூபாய். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 6,412.5 கோடி தமிழக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக வழங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கான திட்டங்கள், உதவித்தொகை மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு ரூ.10.76 லட்சம் கோடிக்கும் மேல். தமிழகத்தின் நேரடி வரிப் பங்களுப்பான ரூ.5.16 லட்சம் கோடியை விட இரண்டு மடங்கு அதிகம்.

2004 – 2014 பத்தாண்டு கால காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு மற்றும் உதவித் தொகை, வெறும் ரூபாய் 94,977 கோடிதான், 2004- 2014ல் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உதவித்தொகை ரூ.57,924.42 கோடி மட்டுமே. காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தை விட, மூன்று மடங்கு அதிகமாக, பிரதமர் மோடி தமிழகத்துக்கு நேரடி நிதியாக வழங்கியுள்ளார்.

நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பதை திசைதிருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில், மீண்டும் ஒரு முறை பொய் கூறியிருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்வதில் மட்டுமே கவனமாக இருந்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகள் பற்றி பேசும் திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். நிதித் துறையில் அனுபவம் பெற்ற, ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்ததை எளிதாகக் கண்டறிந்த, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் போன்றவர்களிடம் பொய் சொல்பவர்கள் ஆலோசனை கேட்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.