“என் தங்கச்சியை நாய் கடிச்சிருச்சு” என ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓபிஎஸ் பேசுவது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களைத் திரட்டி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில், ஓபிஎஸ் தரப்பு இணைந்து போட்டியிட உள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் தலைமையில் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “கடந்த நான்கரை ஆண்டுகள் பாஜகவின் தயவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால் இன்று கூட்டணி இல்லை என்று சொல்லி அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி அதிமுகவை ஐந்தாக உடைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இந்த கட்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ளார். இந்த கழகத்தை காக்கத் தான் தொண்டர்களை நோக்கி சென்றுள்ளோம். வருகின்ற தேர்தலில் தொண்டர்கள் எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். எடப்பாடி இல்லாத அண்ணா திமுக நிச்சயம் உருவாகும். பதவி இல்லாததால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுகிறார்” என ஓபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, செம்மலை, ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பிபினரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
பின்னர் இந்தக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “மாநிலத்தின் உரிமையை மாநில கட்சியால் தான் மீட்டெடுக்க முடியும். தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பேரிடர் காலங்களில் கேட்கப்பட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. சுனாமியில் இருந்து ஒக்கி புயல் வரை எந்த பேரிடரிலும் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. “என் தங்கச்சியை நாய் கடித்து விட்டது” என ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓபிஎஸ் பேசுவது. ஓபிஎஸ் ஜனகராஜ் போல ஆகிவிட்டார்” எனத் தெரிவித்தார்.