அவதான் பிரிஞ்சு போணும்னு சொன்னா: முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால்!

என்னுடைய முன்னாள் மனைவியிடமிருந்து பிரியும் முடிவை நான் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கேட்கும் போது கூட அவர்தான் என்னை விட்டு பிரிய வேண்டும் என்று சொன்னார். நான் அமைதியாக தான் இருந்தேன் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியான ரஜினியை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இதனையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதலில் இருந்த விஷ்ணு, கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த இருவாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் யூடியூப் சேனலுக்கு அவர் அண்மையில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

உண்மையில் நான் என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இனிமேல் நம்முடைய வாழ்க்கை தனியாகத்தான் இருக்கப் போகிறது என்று நான் முடிவே செய்து விட்டேன். அப்போதுதான் நான் ஜுவாலாவை சந்தித்தேன். மிகவும் பாசிட்டிவான அவர் என்னுடன் பழக ஆரம்பித்தார். பழக ஆரம்பிக்கும் பொழுதே அவரிடம் நான், ஏன் என்னுடன் பழகுகிறாய். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதை தெளிவாகச் சொன்னேன். ஆனால் அவரோ என்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னார்.

அப்போதுதான் எனக்கு ஒரு ஸ்பார்க் வந்தது. அது நம்முடைய பிரச்சினைகளை காரணம் காட்டி, மற்றவர்களின் ஆசைகளை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பது. அவரும் ஒரு விவாகரத்தான பெண்மணிதான். அவருக்கும் மீண்டும் நாம் ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்தது. எனக்கு ஜுவாலாவின் மென்மைத்தன்மையானது மிகவும் பிடித்திருந்தது. இதனையடுத்து தான் நாம் ஏன் நம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று யோசித்தேன் அப்போதும் நான் அவரிடம் வரும் காலங்களில் என்னுடைய மகனுக்காக மீண்டும் நான் ரஜினியுடன் சென்றால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு அவர் அதுதான் என்னுடைய தலையெழுத்து என்றால் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டார்.

உண்மையில் என்னுடைய முன்னாள் மனைவியிடமிருந்து பிரியும் முடிவை நான் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் கேட்கும் போது கூட அவர்தான் என்னை விட்டு பிரிய வேண்டும் என்று சொன்னார். நான் அமைதியாக தான் இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.