மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் பெரிய துரோகம் செய்தார் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மேடையில் வருத்தப்பட்டு பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மாவட்ட வாரியாக பல்வேறு நிகழ்ச்சிகளை திமுகவினர் நடத்தி வருகின்றனர். திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி பங்கேற்று பேசினார். அப்போது மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பெரிய துரோகம் செய்துவிட்டார் எனக்கூறி வருத்தப்பட்டார். இதுதொடர்பாக ஆர்எஸ் பாரதி பேசியதாவது:-
சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மரணமடைந்தார். காலை 6.30-7 மணிக்கெல்லாம் செய்தி வருகிறது. 7.30 மணிக்கெல்லாம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், யாரையும் கேட்காமலேயே விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார். பிரேமலதாவும் கேட்கவில்லை; வேறு எவரும் கேட்கவில்லை. ஆனால், தானாகவே ‘அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த விஜயகாந்த் யார்? என்றால்.. கடந்த 2016ம் ஆண்டு நம்மோடு கூட்டணி வைக்க மறுத்தவர். கூட்டணி வைக்க, மிக அழகாகக் கதைகள் சொன்னார் கருணாநிதி. ‛‛விஜயகாந்த் என்கிற கனி, மரத்தில் இருக்கிறது. நிச்சயமாக அந்த கனி என் மடியிலேயேதான் விழும்” என்று மிகுந்த உருக்கத்தோடு, பெருந்தன்மையோடு, அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த விஜயகாந்த் நம்மோடு கூட்டுச் சேர மறுத்துவிட்டு தனியாக நின்றார். அன்றைக்கு மட்டும் அவர் தனியாக நிற்காமல் நம்முடைய கூட்டணியில் இருந்திருந்தால், கருணாநிதி ஒரு முதல்வராகவே மறைந்திருப்பார். இன்னும் சொல்லப்போனால், அவர் மறைந்திருக்கவே மாட்டார். மேலும் அவருக்கு முதல்வர் பதவி 2016ல் கிடைத்திருந்தால், அந்த தெம்பிலேயே அவர் வாழ்ந்திருப்பார். இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதா கூட இறந்திருக்க மாட்டார். கருணாநிதி முதலமைச்சர் ஆகியிருந்தால், ஜெயலலிதா அந்நேரம் அமெரிக்காவுக்குச் சென்று உடல்நிலையில் கவனம் செலுத்தி இருப்பார். என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ எல்லாத்தையும் செய்திருப்பார். அவரும் உயிரோடு இருந்திருப்பார்.
அதேபோல், விஜயகாந்த்தும் இறந்திருக்க மாட்டார். அன்று படுத்தவர்தான் விஜயகாந்த். அதன் பிறகு அவரும் எழுந்திருக்கவே இல்லை. அவரும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து இன்று நமக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்திருப்பார். ஆனால் விஜயகாந்த் எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்தார். முதலமைச்சராக இருந்து மறைய வேண்டிய கருணாநிதிக்கு ஒரு எதிர்க்கட்சி தலைவராகக்கூட இல்லாத நிலையில் அவரை மறையச் செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த். இருந்தாலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர் விஜயகாந்துக்காக செய்தார். ஏனென்றால் அந்த வலி அவருக்குத் தெரியும். தனது தந்தைக்கு மெரினாவில் இடம் அளிக்க மறுத்த வலி அவருக்கு தெரியும். நமது தலைவருக்கு எடப்பாடி பழனிசாமி மெரினாவில் இடம் கொடுக்க மறுத்த போது, நான்தான் வழக்கு போட்டேன். நீதிமன்றத்தில் போராடி மெரினாவில் கருணாநிதிக்கு இடம் பெற்று கொடுத்தோம். இவ்வாறு அவர் பேசினார்.