இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த சென்ற கலா மாஸ்டருக்கு ஈழத்தமிழர்கள் பெயரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். இவர் இலங்கையில் தொழில் தொடங்க முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் பாடகர் ஹரிஹரனை வைத்து இசை நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வரும் பணத்தை கல்வித் துறைக்கு செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த இசை நிகழ்ச்சிக்காக யோகிபாபு, கலா மாஸ்டர், ரம்பா, தமன்னா, ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு தமன்னாவை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவர் அடடா மழைடா பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு ரேம்ப்வாக் போல் ரசிகர்களை நோக்கி மேடையின் மீது நடந்து வந்தார். அப்போது சிலர் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். இதையடுத்து தமன்னா ஜெயிலர் படத்தில் வந்த காவாலா பாடலுக்கு நடனமாடினார், ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடினர். இதையடுத்து தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து நாற்காலிகளை இழுத்து போட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர். அப்போது ரம்பா அவர்களிடம் மேடையில் இருந்தபடியே பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் நாங்கள் உங்களுக்காகத்தானே வந்துள்ளேன். நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உயர் அதிகாரிகள் எல்லாம் இருக்கிறார்கள். நாங்கள் உங்களை நம்பி வந்தோம். இப்படி செய்யலாமா என தன்மையாக பேசினார்.
ஆனாலும் ரசிகர்கள் கேட்ட பாடில்லை, ரச்சிதா ஆடிய போதுகூட பலர் இப்படித்தான் அவர்கள் இடத்திலிருந்து வேலியை தாண்டி விஐபிக்களின் இடத்திற்கு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலா மாஸ்டரும் உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன், அமைதியாக இருங்கள் என கூறினார், ஆனாலும் அவர் பேச்சை யாரும் கேட்கவில்லை. போலீஸாராலும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. இதனால் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்புகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் கலா மாஸ்டரின் புகைப்படம், அவர் பிறந்த தேதி, இறந்த தேதி பிப்ரவரி 9ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.