காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா 2024ல் பங்கேற்று தனது புத்தகம் குறித்து பேசிய ப. சிதம்பரம் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணமோசடி தடுப்புச் சட்டத்தை மாற்றுவோம். புதிய பணமோசடி தடுப்புச் சட்டத்தை இயற்றுவோம். தற்போதைய பண மோசடி தடுப்புச் சட்டத்தை நாங்கள் விருப்பத்தோடு அமல்படுத்தவில்லை. இந்த சட்டம் கடந்த 2002ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் அதைச் செய்தோம். இரண்டு திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்தோம். நான் அறியாமல் செய்த குற்றம் அது. இந்த சட்டம் ஒரு ஆயுதமாக மாற்றப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு சட்டமும் ஆயுதமாக மாற்றப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்கான அரசியல் ஆயுதமாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், இந்த சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.