பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நாளை மாலை நடைபெற உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் – மத்திய அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விவசாயிகள் சங்க தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன்படி வேளாண் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதோடு, விளைபொருட்களுக்கு லாபகரமான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான சட்டத்தை இயற்ற மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதோடு, லாபகரமான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான சட்டமும் இயற்றப்படவில்லை.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அமைத்தர் பியூஸ் கோயல், பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் அமைப்பின் நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அவர், 8 நாட்கள் அவகாசம் கேட்டார். ஆனால், அவகாசம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நாளை மாலை 3 மணிக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர்கள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்று, சண்டிகரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக ஒருங்கிணைப்பாளராக செல்கிறேன். புதுடெல்லியை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கி விட்டது. பேரணியில் அதிக அளவில் விவசாயிகள் திரண்டு இருப்பதால், விவசாயிகளுக்கு மதிப்பளித்து நல்ல தீர்வை மத்திய அரசு எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.