கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளை விட அங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எண்ணிக்கை அதிகம் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பூந்தமல்லியில் யாத்திரையின்போது கூறியதாவது:-
தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக அரசால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் எதுவுமே முன்னேறவில்லை. இன்றுவரை, மழைக்காலத்தில் வெள்ளக்காடாகத்தான் மாநிலத்தின் தலை நகரமே தத்தளிக்கிறது. கடந்த 2023 டிசம்பரில், மிக்ஜாம் பெருவெள்ளத்தால் திருமழிசை சிப்காட் மூழ்கியது. ஆனால் இவற்றை எல்லாம் சரி செய்யாமல், இந்த ஜனவரி மாதம், முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் 100 விழா நடத்தி, பூந்தமல்லியில் 500 கோடி மதிப்பில் சினிமா நகரம் உருவாக்குவோம் என்று கூறுகிறார். மக்களுக்கு வடிகால், நல்ல சாலை என இவையெல்லாம் செய்யாமல், சினிமாவுக்கு 500 கோடி செலவு செய்கிறார். மக்கள் தேவைக்கு நேரெதிராக ஆட்சி நடக்கிறது என்பதற்கு இதுவே சான்று. குறிப்பாக, உதயநிதி தயாரிக்கும் திரைப்படங்களின் செலவைக் குறைக்க, மக்கள் வரிப்பணத்தில் சினிமா நகரம் அமைக்கிறது திமுக. சென்னை மாறவேண்டும். மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்.
இந்தியா டுடே பத்திரிகையின் சர்வே, கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில், ஸ்டாலினை 61% மக்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்கள். ஆனால், நேற்று வெளிவந்த சர்வே முடிவுகளில், 36% மக்கள் தான் முதலமைச்சர் ஸ்டாலினை மதிக்கிறார்கள். நம் கண் முன்னால், பெங்களூர், மும்பை, டெல்லி என நாட்டின் நகரங்கள் அனைத்தும் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றன. அங்கிருக்கும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் நகரங்களை முன்னேற்ற உழைக்கின்றனர். ஆனால் சென்னை பின்நோக்கிச் செல்கிறது. சென்னையில் வளர்ச்சி இல்லை. நாட்டின் தூய்மை நகரங்களின் வரிசையில், சென்னை, நாட்டில் 199 ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னையில் 88% குப்பை மறுசுழற்சி செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. மழை வந்தால் இதனால் சென்னை முழுவதுமே பெரிதும் பாதிக்கப்படுகிறது. காரணம், சென்னையின் பாராளுமன்ற உறுப்பினர்கள். எந்தத் தகுதியுமே இல்லாமல், வாரிசு கோட்டாவில் பதவிக்கு வந்தவர்கள். முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், தங்கம் தென்னரசுவின் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி. இவர்களுக்கு மக்களின் கஷ்டம் எப்படி தெரியும். சென்னை மழையால் தத்தளித்தபோது, இவர்களில் ஒருவர் கூட களத்தில் இல்லை.
இன்று தமிழகத்தில் 8,000 பேருந்துகளை, ஓட்டுநர்கள் இல்லாமல் நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் அவதிக்குள்ளாவது சாதாரண பொதுமக்களே. சாதாரணமாக ஒரு திட்டத்தைச் சென்னையில் செயல்படுத்த பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சி மாறும்போதெல்லாம் கமிஷனுக்காக, மீண்டும் முதலில் இருந்து பணிகளைத் தொடங்குகிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் பல மடங்கு முன்னேறி வருகின்றன. ஆனால், சென்னை, குடும்ப அரசியலை நம்பி ஏமாந்து, தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திருமழிசையில் பேருந்து நிலையம் கட்டப் போவதாக 2021 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். தனது துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர் சேகர்பாபு 80% பேருந்து நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், 2023 ஜூன் மாதம் திறக்கப் போவதாகவும் அறிவித்தார். இன்னும் அந்தப் பணிகள், 50% கூட முடியவில்லை. ஆமையை விட மெதுவாக பணிகள் நடத்துகிறார்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருக்கும் பேருந்துகளை விட தினம் ஒரு பிரச்சினை என்று ஆர்ப்பாட்டம் நடப்பதே அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.