இன்றைய முதல்வர் அன்று சொன்னது ஞாபகம் இருக்கா?: அண்ணாமலை

எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின் இருந்தபோது, ஆளுநர் உரையைப் புறக்கணித்துப் பேசிய பேச்சுகளை குறிப்பிட்டு, தற்போதைய ஆளுநர் உரையை விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக சட்டசபையில் நேற்று சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. ஆளுநர் உரையைப் புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது.

நான் தொடக்கத்திலே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு முக ஸ்டாலின்: ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல். எனவே, அரசு எழுதித் தந்திருக்க கூடிய Failure பேப்பர்களை கவர்னர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். எனவே, நாங்கள் அதை கண்டித்து, அவரது உரையை புறக்கணித்து, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம். 2020ஆம் ஆண்டு முக ஸ்டாலின்: ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து, அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம். 2021ஆம் ஆண்டும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர். இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும் விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண்.” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.