மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தனித் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று.. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சதிகார திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு.. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும்.
இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒன்றிய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
தீர்மானம் 1 – “2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என்று முதல் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
தீர்மானம் 2 – ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்த இரண்டு தீர்மானங்களையும் மாண்புமிகு உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதிமுக, கொ.ம.தே.க., தவாக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்துக்கு ஆதரவாக பேசிய கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன், “வடக்கே பல மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறீர்கள். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி சாத்தியமாகும்?. நாங்கள் சந்தேகப்படுவது சரிதானே…” என்றார்.
அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில், “மாநில மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் இது” என்றார். மேலும், “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை தமிழக பாஜக புரிந்துகொள்கிறது” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் என்றார்.
“முதல்வர் கொண்டுவந்த 2 தீர்மானங்களையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அழிப்பதாக உள்ளது” என்றார் எம்எல்ஏ ஜவாஹிருல்லா.
உறுப்பினர்களின் விவாதங்களை தொடர்ந்து மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனித் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.