அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல: மதுரா சுவாமிநாதன்!

டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நேற்று கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா ஸ்வாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன்.

அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். எனது தந்தையும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனை நாம் தொடர்ந்து கவுரவிக்க எண்ணினால், எதிர்காலத்துக்காக நாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உத்திகளிலும் விவசாயிகளை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, எல்லை பகுதிகளில் சீல் வைத்து பல்வேறு தடைகளை போலீஸார் ஏற்படுத்தியிருந்தனர். தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீஸார் நேற்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டினர். பலர் கைது செய்யப்பட்டனர்.