ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மத்திய அரசின் நடவடிக்கை இந்திய ஜனநாயக மாண்புகளை அழித்தொழிப்பது; மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக சாடினார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராகவும் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 2 தனித் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்வரால் கொண்டுவரப்பட்ட இந்த இரண்டு தீர்மானங்களும் வரலாற்று சிறப்பு மிக்கவை. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா எந்த மாநில உரிமைக்காக இங்கே போராடினார்களோ, அந்த மாநில உரிமைகள் அனைத்தும் முழுமையாக பறிக்கப்படும் மோசமான சூழ்நிலையை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு நசுக்கி சர்வாதிகாரதன்மையுடன் இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஜனநாயக மாண்புகளையும் குழி தோண்டி புதைக்கிறது மத்திய பாசிக பாஜக அரசு. மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற போது ரிசர்வ் வங்கி அதிகாரத்தை எடுத்துக் கொண்டு கவர்னரது ஒப்புதலைப் பெறமால ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தை கையில் எடுத்தது கடந்த கால வரலாறு.
இந்திய தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்கிறவர்களாக நியமிக்கப்படும் சூழல், இந்திய தகவல் உரிமை ஆணையத்தின் தலைவரும் ஒரு சித்தாந்தத்தை ஏற்பவராக இருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் ஆளுநர் பதவி வழங்கப்படுகிறது. இந்தியா என்பதே பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்டது. 546 சமஸ்தானங்களைக் கொண்டுதான் இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் இந்த நாடு உருவானது. இந்த ஜனநாயக மாண்பை அழித்தொழிக்கத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் தமிழ்நாடு தனிநாடு வேண்டும் என்று கோரினார். பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சி கோரினார். இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தென்மாநிலங்கள் தனிநாடு ஆகும் என தேசியத்தின் பெயரில் கட்சி நடத்துகிற காங்கிரஸ் பிரதிநிதி பேசுகிறார். அவர்களாலேயே சகித்துக் கொள்ள முடியாத ஆணவ, அடாவடியாக ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே கோவில், ஒரே வழிபாட்டு உரிமை என்றெல்லாம் ஆதிக்கத்தை நிலை நிறுத்துகின்றனர். தமிழ்நாடு போன்ற ஜனநாயக மாண்புள்ள சுயமரியாதை கொண்ட மாநிலங்களால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனைத் தான் தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், கருணாநிதி வழியில் தென்னிந்தியாவின் முதல் குரலாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக அரசினர் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழரின் வாழ்வுரிமைக்காக களத்தில் நின்று, போராடுகிற தமிழ்நாடு விடுதலையை நேசித்த என்னைப் போன்றவர்கள் இன்றைக்கு ஜனநாயக மரபுகளுக்குள் நின்று பணியாற்றுகிறோம். தனிநாடு கேட்ட இயக்கத்தில் இருந்து ஆயுதப் போராட்ட வழியில் இருந்து அமைதி வழியில் இந்த ஜனநாயக மாண்பை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த நாடு மதத்தின் பெயராலோ ஜாதியின் பெயராலோ கூறு போடக் கூடாது என்பதால் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு தொடங்கி இன்று மாநில உரிமைகளை தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு பறித்துள்ளது. ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி மோடி அரசு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் தேச நலனுக்கும் பன்முகத் தன்மைக்கும் எதிராக செயல்படுகிறது மத்திய அரசு. காந்திய தேசம் என்பது மாற்றப்பட்டு கோட்சே, சாவர்க்கர் தேசமாக்கப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக மத்திய அரசு பரிசு தர வேண்டும். அதற்கு நேர் எதிராக மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை குறைப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. இவ்வாறு வேல்முருகன் பேசினார்.