சீமானின் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தமது யூ டியூப் தளத்தில் பதிவேற்றிய வீடியோக்கள் அனைத்தையும் இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சித்ததாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் சிலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல சேலம் ஓமலூர் அருகே இணையதளத்தை பார்த்து வெடிகுண்டுகள் தயாரித்த வழக்கையும் என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிக்கியவர்கள் ஆன்லைன் மூலம் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றிருக்கின்றனர். இந்த இரு வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 2-ந் தேதி நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி (இடும்பாவனம் கார்த்திக்) உள்ளிட்டோர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பாக தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். என்.ஐ.ஏ. விசாரணைக்குப் பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்து விசாரணையில் என்ன நடந்தது எனவும் அவர்கள் விவரித்திருந்தனர்.
இந்த பின்னணியில் இன்றும் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன் ஆஜரானார். இன்றைய விசாரணையின் போது தமது சாட்டை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்த அனைத்து வீடியோக்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சாட்டை துரைமுருகன் கூறியதாவது-
என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் நான் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது சாட்டை யூடியூப்பின் ஒட்டுமொத்த வீடியோக்களையும் கேட்டிருந்தனர். இதனையடுத்து சாட்டை யூடியூப்கள் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் ஹார்ட் டிஸ்க் ஒன்றில் பதிவேற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன். மொத்தம் 1,500 வீடியோக்களை கொடுத்துள்ளேன்.ஜெர்மனியை சேர்ந்த ஒருவர் எங்களது செல்போனுக்கு தொடர்ச்சியாக தொடர்பு கொண்டதாகவும் அவர் யார் என தெரியுமா? எனவும் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் பேசுறாங்க.. வாழ்த்து சொல்வாங்க.. காணொலி பிடிச்சிருந்தா பேசுவாங்க.. மேடையில் பேசும்போது பாராட்டு சொல்வாங்க.. என பதிலளித்தேன்.
விசாரணை எதை நோக்கி போகிறது என தெரியவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாங்கள் ஜனநாயகப் பாதையில் இருக்கிற அரசியல் இயக்கம். மக்களாட்சி கொள்கையை ஏற்று தேர்தல் அரசியலில் நிற்கிறவர்கள் நாங்கள். ஆயுதப் போராட்டத்தை தூண்டுவதோ, ஆயுதப் புரட்சியை ஏற்படுத்துவதோ எங்கள் நோக்கமே அல்ல. முழுமையாக மக்களாட்சித் தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சி நாம் தமிழர் கட்சி. அதை நாங்கள் தெளிவுபடுத்தி சொல்லி இருக்கிறோம். என்.ஐ.ஏ. அதிகாரிகள் எங்களை ஒரு சாட்சியாகத்தான் விசாரிக்கின்றனர். எங்களை குற்றவாளியாக விசாரிக்கவில்லை. இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். என்ன தகவல், என்ன டேட்டா கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என சொல்லி இருக்கிறோம். என்னுடைய வீடியோக்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு என தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கேட்டார்கள்.. நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
ஓமலூரில் வெடிகுண்டு தயாரித்து கைதான நபர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. அவர்களை நாங்கள் பார்த்தது கூட கிடையாது. அவங்க கூட பேசுனதே கிடையாது. ஆன்லைனில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அட்டை பதிவு செய்ததாக சொல்கின்றனர். இதற்கு பின்னர்தான் ஆன்லைன் உறுப்பினர் அட்டைக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தோம். அந்த நபர்கள் தவறான பாதைக்கு போனதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. ஆனால் நாம் தமிழர் என்பதால் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் எங்களை விசாரிக்கின்றனர். தேவைப்பட்டால் அழைப்போம் என சொல்லி இருக்கிறார்கள். எத்தனை முறை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்தாலும் வருவோம் என சொல்லி இருக்கிறோம். இவ்வாறு சாட்டை துரைமுருகன் கூறினார்.