காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் தொடர்பாக, இந்தியாவின் ஜனநாயகத்தையும், பல கட்சி முறையையும் பாதுகாக்க வேண்டும் என நீதித் துறைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மோடி தலைமையிலான மத்திய அரசினை கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “அதிகார போதையில், மக்களவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை மோடி தலைமையிலான அரசு முடக்கியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய வீழ்ச்சி. பாஜகவால் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட பணம் தேர்தலில் பயன்படுத்தப்படும். ஆனால், நாங்கள் பொதுமக்களிடம் பெற்ற நன்கொடை நிதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் தான் எதிர்காலத்தில் நாட்டில் தேர்தலே இருக்காது என்று நாங்கள் கூறிவருகிறோம். இந்தியாவின் ஜனநாயகத்தையும், பல கட்சி முறையையும் பாதுகாக்க வேண்டும் என்று நீதித் துறைக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த அநீதிக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராக நாங்கள் வீதியில் இறங்கி தீவிரமாக போராடுவோம்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உறுதியுடன் போராடும் என்று தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பயப்பட வேண்டாம் மோடி ஜி. காங்கிரஸ் என்பது பணபலத்தின் பெயர் இல்லை. மக்கள் பலத்தின் பெயர். சர்வாதிகாரத்தின் முன் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்; தலைவணங்கவும் மாட்டோம். இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் தொண்டனின் ஒவ்வொரு அணுவும் போராடும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி பொருளாளர் அஜய் மக்கான், “இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளன. 2018-19-ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியதுடன் ரூ.210 கோடி அபராதமும் வருமான வரித் துறை விதித்துள்ளது. பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள எங்களின் கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தால் எங்களால் பணத்தை எடுக்க முடியாது. இது வெறும் வங்கிக் கணக்கு முடக்கமல்ல, ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தை முடக்குவதற்கு சமம்” என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.