காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்துள்ளதால், ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் முடக்கி விட்டார்கள். இப்பொழுது எங்களிடம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கோ அல்லது மின்சார கட்டணம் செலுத்தக்கூட பணம் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது ஜனநாயக விரோத போக்கு என்றும் நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில், ‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகளை முடக்கும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்நடவடிக்கை, ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க பயப்படும் பாஜகவின் அச்சத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.