மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை!

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார் குவிந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் அங்குள்ள பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளார். இதனால் பெண்கள் பயந்துபோய் இருந்தனர்.

இதற்கிடையே தான் கடந்த மாதம் ரேஷன் ஊழல் புகார் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறையை தடுத்து தாக்கி ஷாஜகான் ஷேக்கை தப்பிக்க வைத்தனர். தற்போது ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து பெண்கள் அவர் மீது புகார் அளிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகானின் கூட்டாளியான ஷிபாபிரசாத் ஹஸ்ராவுக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளை போராட்டக்காரர்கள் எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. எதிர்க்கட்சியினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கினர். இதனால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இப்படி கடந்த ஒன்றரை மாதமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் தேசிய பட்டியலின ஆணையத்தை சேர்ந்தவர்கள் நேற்று சந்தேஷ்காலி கிராமத்தில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி அவர்கள் விசாரித்தனர். தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் மற்றும் உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அறிக்கை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருண் ஹால்தார் ஒப்படைத்தார்.

அந்த அறிக்கையில், மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பட்டியலின சமுதாய மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விஷயத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு எந்த மாதிரியான முடிவை எடுக்க உள்ளார் என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.