மேகதாது அணை: சித்தராமையாவுக்கு வைகோ கண்டனம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ள நிலையில், அதற்கு மதிமுக பொதுச்செயாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கர்நாடக சட்டமேலவையின் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவதால் நம்மை விட தமிழகத்திற்கே அதிக நன்மை கிடைக்கும். தமிழகத்திற்கு கூடுதல் நீர் கிடைக்கும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டது. இந்தத் திட்டத்தை நமது மண்ணில் செயல்படுத்தினாலும், மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, கர்நாடகா பட்ஜெட் உரையில் பேசிய சித்தராமையா, “மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. மேகதாது அணையைக் கட்ட இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதனை நாம் அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று தெரிவிப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த குழுக்கள் அமைத்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்கு உரியது. கர்நாடகா, நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.