டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் (அரசியல் சார்பற்றது) இன்று காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கோரும் மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்கு முறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் இன்று காலை ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகித்தனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பழனியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், விவசாயிகள் தடுப்புகளை அகற்றிக் கொண்டு உள்ளே நுழைந்து, சோழன் விரைவு ரயிலை மறித்தனர். சுமார் 5 நிமிட போராட்டத்துக்கு பிறகு அதில் ஈடுபட்ட ஏறத்தாழ 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.