சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும்: மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசால் நிறுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதியளித்து இருக்கிறார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் இன்று சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இஸ்லாமிய அமைப்புகள் தலைவர்கள், தலைமைச் செயலாளர் அரசு செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டு உள்ளார். அதில்,

* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள், இனிமேல் ரூபாய் 5 இலட்சம் வரை வழங்கப்படும்.

* வக்ஃப் நிலங்களை கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, 30 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க ஆய்வு செய்து, அரசு விரைவில் அனுமதி வழங்கும்.

* வக்ஃப் சொத்துக்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய சென்னையில் இருப்பதை போல மதுரையிலும் ஒரு தீர்ப்பாயம் அமைக்க உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும்.

* சிறுபான்மையின மக்களுக்கு வழங்கிவந்த கல்வி உதவித் தொகையினை (Pre-Matric Scholarship) ஒன்றிய அரசு 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு நிறுத்திவிட்டது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

* இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏழை சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகையினை பெற இயலாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே. ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையினை, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.

* உருது, அராபிக் மற்றும் இதர ஓரியண்டல் மொழித் தேர்வுகளுக்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.540/-லிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தியது அரசின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இந்தக் கல்வியாண்டில் முந்தைய கட்டணத் தொகையான ரூ.540/- மட்டுமே மாணவர்களிடமிருந்து பெறப்படவேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்படும்.

* மேலும், ஒரியண்டல் மொழித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, இந்த மாதம் 29-2-2024 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

* சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் அராபிக் பாடத்திட்டம் குறைவான மாணவர் சேர்க்கையால் இந்த ஆண்டு கைவிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்களுடைய கோரிக்கையை கருத்தில் கொண்டு, அடுத்த கல்வியாண்டு முதல், இப்பாடத்திட்டம் மீண்டும் தொலைதூரக் கல்வி மூலம் கொண்டு வரப்படும்.

* முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்த இரண்டாம் மனைவி மற்றும் அவரது வாரிசுகளுக்கு கணவர் இறப்புக்கு பின்னால் வாரிசு சான்றிதழ் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அனைத்து உத்தரவுகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

பின்னர் இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-

எல்லார்க்கும் எல்லாம் என்ற வார்த்தைக்குள் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையினரும் உண்டு. அனைவரும் உண்டு. திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது. இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில், பேட்டி அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஒருவர், ‘பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்’ என்று சொல்லி இருக்கிறார். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது. பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக திமுக அரசு உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு திமுக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

சிறுபான்மை மக்களாகிய நீங்கள் அச்சமற்று வாழும் அமைதிச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அமைதியான சூழலை உருவாக்கித் தருவதே நல்லாட்சியின் இலக்கணம் ஆகும். அத்தகைய இலக்கணப்படி நடைபெறும் இந்த அரசுடன் இஸ்லாமிய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை பரிசீலித்து, படிப்படியாக நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணா தன்னுடன் யாரை இணைத்துக் கொண்டார் என்றால் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களைத்தான்.

சிறுபான்மையினர் அமைப்புகள் சேர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவை நடத்தியபோது, ‘என்னை உங்களில் இருந்து பிரித்துப் பார்த்து நன்றி சொல்லாதீர்கள், நான் என் கடமையைத் தான் செய்தேன்’ என்றார். அத்தகைய எண்ணம் கொண்டு தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மொழியால் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து, மாநிலத்தையும் வளர்த்து, இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.