யானைகளால் மரணங்கள்: வயநாடு சென்ற ராகுல் காந்தி ஆறுதல்!

யானை மற்றும் புலி தாக்கி வயநாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அத்தொகுதி எம்பியான ராகுல் காந்தி இன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது ராகுல் காந்தியின் காரை பொதுமக்கள் மறித்து குமுறல்களை கொட்டியதால் பரபரப்பு நிலவியது.

2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். ஆனால் வயநாட்டில் மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றார் ராகுல் காந்தி. தற்போதைய லோக்சபா தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் “இந்தியா” கூட்டணியில் இருக்கும் சிபிஐ கட்சி, வயநாடு தொகுதியை கேட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் மறுக்கும் நிலையில் ராகுல் காந்திக்கு எதிராக இடதுசாரிகள் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளனர். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்த சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா களமிறக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் வயநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள், முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வயநாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் யானை, புலி ஆகியவை தாக்கி ஒரே மாதத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். வயநாட்டை சேர்ந்த அஜீஷ் என்பவர் கடந்த 10-ந் தேதி யானை தாக்கி பலியானார். சில நாட்களுக்கு முன்னர் வனத்துறை பணியாளர் பால் என்பவரும் யானை தாக்கி மரணம் அடைந்தார். இதுதான் வயநாடு மக்களின் போராட்டங்களுக்கு காரணமாகும். மேலும் வயநாடு மக்களின் போராட்டங்களில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாற்காலிகளை வீச களேபரமானது. இதனால் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்த அப்பகுதியே போர்க்களமானது. வயநாட்டில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தமது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திய மூத்த காங்கிரஸ் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி இன்று அங்கு விரைந்தார். வயநாட்டில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி. அப்போது சில இடங்களில் ராகுல் காந்தியின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் தங்களது குமுறலை கண்ணீருடன் கொட்டினர். இதனால் அங்கு பரபரப்பும் நிலவியது.