தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

இலங்கையில் தமிழக மீனவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லைக்குள் வருவதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தே வருகிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் கடந்த 4ஆம் தேதி நடந்தது. அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் 23 பேரும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் படகுகளின் டிரைவர்களாக இருந்த இரு மீனவர்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. மேலும், மற்றொரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன பிடித்ததாகச் சொல்லி அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. மற்ற 20 மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க உத்தரவிட்டது. இது மட்டுமின்றி அவர்கள் படகுகளையும் நாட்டுடைமையாக்க உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மத்திய அரசு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், மீனவர்களின் உடைமைகளைச் சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக நரேந்திர பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதில் மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்கள் திரும்பத் திரும்ப குற்றம் செய்வதாகக் கூறி, அநியாயமாக நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு இருக்கிறது. இது நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் தள்ளுகிறது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டும் என்பதைத் தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன். நமது மீனவர்கள் விடுவிக்கப்படுவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.