பாஜகவில் சேரப் போகும் அதிமுக முக்கிய தலைவர்கள் யார் என தெரியும்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுகவில் இருந்து இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போறாங்களாம். எனக்கு தெரிந்து அவர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியாக கூட இருக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அதிமுக முக்கிய தலைவர்கள் சிலர் நாளை தங்கள் கட்சியில் சர்ப்ரைஸாக சேரப் போகிறார்கள் என அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். நேற்றே இந்த சர்ப்ரைஸ் நடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த நிகழ்வு தள்ளிப் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

இப்போ கொஞ்ச நாளாகவே ஒரு செய்தி போயிட்டு இருக்கு. அதாவது அதிமுக தலைவர்கள் பாஜகவில் சேரப் போவதாக அந்தக் கட்சிக்காரங்க சொல்லிட்டு வர்றாங்க. அதுவும் 2 அதிமுக தலைவர்கள் சேரப் போகிறார்களாம். எனக்கு ஒரு டவுட்டு. எதுக்கு அதிமுகவினர் போய் பாஜகவில் இணைகிறார்கள். ரெண்டுமே ஒன்னுதானே.

இன்னொரு டவுட்டும் எனக்கு இருக்கு. இரண்டு அதிமுக தலைவர்கள் பாஜகவில் சேரப் போறாங்களாம். அந்த ரெண்டு பேரு ஓபிஎஸ், இபிஎஸ் ஆக கூட இருக்கலாம். அந்த அளவுக்கு அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து ஒரு நாடகத்தை ஆடிட்டு வர்றாங்க. ஆட்சியில் இருக்கும் போது, பாஜகவுக்கு அடிமையாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்துவிட்டு இப்போ என்ன சொல்றாங்க தெரியுமா? கூட்டணியில் இருந்ததால் வேறு வழியில்லாமல் செய்துவிட்டோம் என்று சொல்றாங்க. இவங்களை எல்லாம் மன்னிக்கலாமா? இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில் ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த தம்பதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுமதி வழங்கினார்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் (25-2-2024) அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை – கொல்லம் ரெயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரெயிலை அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா-வடக்குத்தியாள் ஆகியோர் தண்டவாளத்தில் ஓடிச்சென்று டார்ச் லைட் ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுநருக்கு சைகை காண்பித்து, ரெயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அத்தம்பதியரின் வீரதீர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிலையில சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார் . மேலும் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கினார்.