தம்பி சாந்தனுக்கு கண்ணீர் வணக்கம்: சீமான் இரங்கல்!

உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு. பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான்.

பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட இரங்கலில் கூறியுள்ளதாவது:-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருட நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மரணமடைந்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும், சுதந்திர காற்றை சுவாசிக்காமலேயே, திருச்சியில் உள்ள அயல் நாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு அவர் மரணம் அடைந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவால், அவரைக் காண ஆவலாக இருந்த அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் விடுதலைக் காற்றை சுவாசிக்க காத்திருந்த நிலையில், இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் கடந்த 15 மாதங்களாக திருச்சியில் உள்ள அயல் நாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, சக முகாம் வாசிகள் யாருடனும் பேசவோ, பழகவோ, நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு, கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் உட்பட்டு தவித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. சிறையிலிருந்து விடுதலை கிடைத்தவர்களுக்கு, சிறப்பு முகாமிலிருந்தும் விடுதலை கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரியிருந்த நிலையில் சாந்தன் மரணம் அடைந்துள்ளார்.

ஆகவே, எஞ்சியிருப்பவர்களையாவது தமிழக அரசு அவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலே கழித்துவிட்ட அவர்கள், எஞ்சிய கடைசி காலத்திலாவது அவர்களது குடும்பத்தினருடன் இருக்க தமிழக அரசு மனிதாபிமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.