குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் சிறிய ரக ரோகிணி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி!

குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அங்கிருந்து சிறிய ரக ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சொந்த நாட்டு செயற்கைகோள்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செயற்கை கோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து தங்கள் செயற்கைகோள்களை ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.

தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால், கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான வேறொரு இடத்தை இஸ்ரோ தேடியது. பொதுவாக, ராக்கெட்ஏவுதளம் அமையும் பகுதி கடற்கரையாகவும், காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ.க்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும். மேலும், நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருப்பதும் அவசியம். இவற்றுடன், நிலநடுக்கோட்டுக்கு அருகேயும், கிழக்கு கடற்கரையை ஒட்டியும் இருக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இடத்தை தேடினர்.

கிழக்கு கடற்கரையையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி, இந்த அம்சங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அங்கு அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக 2,300 ஏக்கர் நிலம் தமிழகஅரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு, இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், குலசேகரன்பட்டினம் இஸ்ரா ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ராக்கெட் ஏவுதளம் மொத்தம் 2,292 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடியில் அமைக்கப்படுகிறது.

இதில் ஏவுதள வசதி, ராக்கெட் பாகங்களை ஒருங்கிணைக்கும் வசதி, தரைதள அலைவரிசையைப் பரிசோதிக்கும் வசதி உள்ளிட்ட 35 அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த ராக்கெட் ஏவுதளம் மூலம் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இந்த ஏவுதளம் ஆண்டுக்கு 24 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திறன் கொண்டதாக அமையும்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, நிலங்களை தமிழக அரசு இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது. கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கி, 2 ஆண்டுகளில் முடிவடையும். இந்த ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி ரக சிறிய ராக்கெட்டுகள் ஏவப்படும். இந்த ராக்கெட்டுகள் தெற்கு நோக்கி ஏவப்படும். தனியார்களும் இங்கு ராக்கெட்டுகளை ஏவுவதற்கு முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இங்கிருந்து ஆண்டுக்கு 24 ராக்கெட்டுகளை ஏவ முடியும். ராக்கெட் தயாரிப்பு, பாகங்களை ஒருங்கிணைத்தல், ஏவுதல், ரேடார் கண்காணிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் போன்ற அனைத்து வசதிகளும் இடம்பெறும். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் ராக்கெட் இரண்டு ஆண்டுகள் கழித்து ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள பகுதியில் இருந்து ரோகினி சவுண்டிங் ராக்கெட் (ஆர்எச் 200) என்ற சிறிய ரக ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஏவுதளத்தில் இருந்து நேற்று பகல் 1.40 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சுமார் 60 கி.மீ. தொலைவு வரை சீறிப்பாய்ந்து சென்ற இந்த ராக்கெட், பின்னர் அருகில் உள்ள கடலில் விழுந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.