கனிமொழியை திமுகவில் ஒதுக்கிதானே வெச்சிருந்தீங்க: அண்ணாமலை

“கனிமொழி அக்கவை திமுகவில் இருந்து ஒதுக்கி தானே வெச்சிருந்தீங்க.. இப்போது மட்டும் என்ன அவங்க மீது திடீர் கரிசனம் உங்களுக்கு?” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். நேற்று முன்தினம் திருப்பூரிலும், நேற்றைக்கு நெல்லையிலும் நடைபெற்ற பாஜக கூட்டங்களில் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இதனிடையே, நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார். ஆனால், இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, கனிமொழியின் பெயரை உச்சரிக்கவில்லை. இதற்கு கனிமொழியும் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை கூறியதாவது:-

“இன்னைக்கு கனிமொழி அக்கா மீது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திடீர் அக்கறையும், பாசமும் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகாலமாக நானும் பார்க்கிறேன். பத்திரிகை நண்பர்களும் பாத்துருப்பீங்க. கனிமொழி அக்கா பாட்டுக்கு சும்மா சுத்திட்டு இருப்பாங்க. அவங்க கூட கலெக்டர் போனால் சஸ்பெண்ட். எஸ்பி போனால் சஸ்பெண்ட். கனிமொழி அக்காவை திமுகவுக்குள்ளே ஒதுக்கிதானே வெச்சிருந்தீங்க. இதே தூத்துக்குடியில் இதுவரை கனிமொழி அக்காவுக்கு திமுக மரியாதை கொடுத்திருக்காங்களா? எதுவுமே கொடுக்கல. இன்னைக்கு தேர்தல் வந்ததும் கனிமொழி அக்காவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் காக்கா பிடிக்கிறாரு. ஆனால் பாஜகவில் நாங்க அப்படி கிடையாது. எல்லோருக்கும் சமமான மரியாதை தான். எல்லோருமே இங்கே தலைவர்கள் தான். என்னுடன் நிற்கும் தலைவர்களை பாருங்க. எல்லோருமே நெஞ்சை நிமித்துட்டு இருக்காங்க. இந்தப் படை போதும் எங்களுக்கு திமுகவை வீழ்த்துவதற்கு.

அனிதா ராதாகிருஷ்ணன் என்னை தேசிய தலைவராக மாற்றிக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடிக்கு வா என அவர் கூப்பிடுறாரு. இன்னொருத்தரு சிவகங்கைக்கு வா என கூப்பிடுறாரு. அதாவது, அனிதா ராதாகிருஷ்ணனை நான் போட்டிப் போட்டு தான் வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. அவர் மேலே ஒரு ஊழல் வழக்கு நடந்துட்டு இருக்குல்ல. அதுல சீக்கிரமாக உள்ளே போயிருவாரு பாருங்க.

அதனால் அனிதா ராதாகிருஷ்ணன் இதுபோல் வீரவசனம் பேசுவதை விட்டுவிட்டு, அவருடைய வழக்கை நடத்துவதில் கவனமாக இருக்கட்டும். எப்படி இருந்தாலும் அவர் ஜெயிலுக்கு போகப் போறது உறுதி. அடுத்த விக்கெட் அவர்தான். அதனால் நான் தேர்தலில் நின்றுதான் அனிதா ராதாகிருஷ்ணனை வீழ்த்தணும்னு அவசியம் இல்லை. அவர் என்னவாக போகிறார் என்று நீங்களே பாருங்க. ஊழல் வழக்கில் உள்ளே போயிட்டார்னா அவரோட எம்எல்ஏ பதவியும் காலியாகிவிடும். அமைச்சர் பதவியும் காலியாகிவிடும். அப்புறம் எப்படி பேசப் போறாருனு பார்ப்போம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.