தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இதை அடுத்து வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மு.க. ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைய விரும்புகிறார். திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 2 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்டுப் பெற கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தமது கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து நேரடியாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பற்றி பேசி வரும் நிலையில் கமல்ஹாசனிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. எனவே இப்போது வரை மக்கள் நீதி மய்யம் – திமுக இடையேயான கூட்டணி என்பது இறுதியாகவில்லை. மணிரத்னம் இயக்கும் ‛Thug Life’ படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு நேற்று புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டணி இறுதியாகாத நிலையில் கமல்ஹாசன் தனது வெளிநாட்டு பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சீட் உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.