எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை: ஆர்.எஸ். பாரதி!

ஐ.டி ஊழியர்கள் போதை பொருட்கள் விற்பதாக சொன்ன எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அண்மையில் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் இந்த விவகாரத்தில் தலைமறைவாகியுள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது அதிமுக.

இந்நிலையில், இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கையாள முடியாமல் திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பழிபோடுகிறார். திமுக அரசை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாட்டில் அதிகளவில் போதைப் பொருட்கள் பிடிபடுவது குஜராத்தில் தான். போதைப்பொருட்களின் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன. நாட்டின் பல இடங்களில் போதைப் பொருட்களை கடத்துவது பாஜகவினர் தான். போதைப்பொருள் வழக்கில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரையே அமித்ஷா, பா.ஜ.கவில் சேர்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவை பரப்பியது அதிமுக தான். அதிமுகவின் குட்கா விவகாரத்தை திசைதிருப்பவே அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. போதைப்பொருள் புகாருக்கு உள்ளானதும் திமுகவில் இருந்து சம்பந்தப்பட்டவர் நீக்கப்பட்டார். குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோர் மீது ஈபிஎஸ் என்ன நடவடிக்கை எடுத்தார்? அதிமுக ஆட்சியில் எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்களா? அவற்றை எல்லாம் திசை திருப்புவதற்காக இன்று எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தி வருகிறார். யாரோ ஒருவர் தவறு செய்துவிட்டார் எனக் கேள்விப்பட்டதும் 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். விஜயபாஸ்கர், ரமணா மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தாரா? திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலூர் தொகுதி எம்.பி மீது கூட வழக்கு வந்தது. நாங்கள் அவரைக் காப்பாற்ற முயன்றோமா? அவர் கைது செய்யப்பட்டு வழக்கை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார். திமுக எம்.எல்.ஏ மகன் விவகாரத்தில் கூட அவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் விற்பனையில் ஐடி பணியாளர்கள் ஈடுபடுவதாக அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஐ.டி ஊழியர்கள், படித்து உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள். தமிழ்நாட்டில் ஐ.டி துறையில் சிறப்பாக படித்தவர்தான் உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை. உலக நாடுகள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.டி பணியாளர்கள் உள்ளனர். ஐடி ஊழியர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. குறிப்பிட்டு யாராவது தவறு செய்தால் குற்றம்சாட்டலாம், ஆனால், பொத்தாம் பொதுவாக ஐ.டி ஊழியர்கள் போதைப் பொருள் விற்பதாக கூறியுள்ளார் ஈபிஎஸ். எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்குள் அவரது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக ஐடி அணி சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.