யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது என அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது. அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும். அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசியுள்ளார். ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசியுள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஆதரித்தவர் என கூறியதை ஏற்கவே முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கிக் கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் ஆளுநர் ரவியின் வேலையா?
அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க் குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். சாதியை மறந்து பூமியில் ஒத்த இனமாக வாழ வலியுறுத்தினார். ஆனால் மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசுதான் அய்யாவை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது. 800 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். அய்யாவின் வரலாறு தெரியாமல் யாரும் வாய்த் திறக்கவே கூடாது. ஆளுநர் சொல்வது போல் அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வரவில்லை, மக்களை அதிலிருந்து காக்க வந்தார். அவர்களிடம் இருந்த மடமையையும் அறியாமையையும் போக்க வந்தார். ஜாதியை வகுத்தவனை நீசன் என கூறும் அய்யா வைகுண்டரை சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் ரவி கூறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பிராஜபதி அடிகளார் தெரிவித்துள்ளார்.
அய்யா வைகுண்டரின் 192 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என பேசியிருந்தார்.