ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அத்துமீறி அணையை கட்டினால், அந்த அணையை உடைத்து தகர்ப்போம் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழகம் – ஆந்திரா எல்லை பகுதியான புல்லூர் பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ஆந்திர அரசு கட்டியுள்ள புல்லூர் தடுப்பணை மீது நின்று ஆந்திர அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கமிட்டனர். இது குறித்து விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் பாலாறு 33 கிலோ மீட்டர் ஓடுகிறது. இந்த பாலாற்றில் அம்மாநில அரசு ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதன் மூலம் தமிழக பாலாற்றுக்கு தண்ணீர் வருவது பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பாலாறு தடுப்பணை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர அரசு ரூ.215 கோடி செலவில் தற்போது ரெட்டிகுப்பம் பகுதியில் புதியதாக மேலும் ஒரு தடுப்பணை கட்ட அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் 26 ம் தேதி அடிக்கல் நாட்டியுள்ளார். ஆந்திர அரசு தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வட மாவட்ட மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது. குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆந்திர அரசு அத்துமீறி அணையை கட்ட தொடங்கினால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி ஆந்திர அரசு கட்டி வரும் அணையை உடைத்து தகர்ப்போம். இது ஆந்திர அரசுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை. அத்துமீறி கட்டப்படும் அணையை தர்க்க எங்கள் ரத்தத்தை சிந்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். எனவே, ஆந்திர அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.