‛இந்தியா’ என்பது நாடு அல்ல. கடவுள் ராமரை ஏற்க மாட்டோம் எனக்கூறி மீண்டும் திமுக எம்பி ஆ ராசா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆ ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெள உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது திமுக ஆளும் கட்சியாக உள்ளது. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். தற்போது திமுக சார்பில் சில கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இழுபறி நீடித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மனதை வெல்லும் வகையில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் நேற்று திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் திமுக இருக்காது என பிரதமர் மோடி சமீபத்தில் பேசிய நிலையில் அதற்கு ஆ ராசா பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக ஆ ராசா பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது. அதாவது, ‛‛தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது.. ஜாக்கிரதை.. என்ன விளையாடுறீங்களா.. நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் அரசியலமைப்பு சட்டம் இருக்காது. அரசியலமைப்பு சட்டம் இல்லாவிட்டால் இந்தியாவே இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாக போய்விடும். மேலும் இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஒரு நாடு அல்ல. ஒரு நாடு என்றால் ஒரே மொழி, ஒரு பாரம்பரியம் மற்றும் ஒரே கலாசாரம் இருக்க வேண்டும். அது தான் ஒரே தேசம். ஆனால் இந்தியா என்பது நாடு அல்ல. அது ஒரு துணைக்கண்டம். என்ன காரணம்?. இங்கே தமிழ் ஒரு தேசம் ஒரு நாடு. மலையாளம் ஒரு தேசம், ஒரு நாடு. ஒரியா ஒரு தேசம் ஒரு மொழி. இவை அனைத்தும் சேர்ந்தது தான் இந்தியா” என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய ஆ ராசா, ஜெய் ஸ்ரீராமர் , பாரத மாதா ஆகியோரை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது எனக்கூறியுள்ளார் .
ஆ ராசாவின் இந்த பேச்சு தொடர்பான வீடியோவை பாஜகவின் ஐடி விங்கு பொறுப்பாளர் அமித் மாளவியா 3 பிரிவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவினர் ஆ ராசாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் திமுகவின் மூத்த தலைவரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஆ ராசாவுக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆ ராசா பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுப்ரியா ஷ்ரினேட், ‛‛ஆ ராசாவின் கருத்துடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை. இதுபோன்ற பேச்சுக்களை நான் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைவரையும் உள்ளடக்கியே ராமர் என நான் நினைக்கிறேன். ராஜாவின் பேச்சை நான் ஆதரிக்கவில்லை. ஒவ்வொருவரும் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.