போதை பொருள் குற்றவாளிகளை கைது செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்: எல்.முருகன்!

மத்திய இணையமைச்சர் எல். முருகன், போதை பொருள் குற்றவாளிகளை விசாரணை செய்தால் இன்னும் பல உண்மைகள் தெரியும் என கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய இணையமைச்சரான எல்.முருகன் சென்னை வேளச்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய எல்.முருகன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் கூடிய விரைவில் வெளியாகும் என பேசியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசியபிறகு வேட்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்றும், தேசிய தலைமையின் முடிவு குறித்து எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் மாநில பணிகளை பார்த்துதான் முடிவெடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், திமுக மற்றும் விசிக கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் போதை பொருள் கடத்தல் அவமானமாக இருப்பதாகவும், தமிழ் நாட்டில் மூளை முடுக்கெங்கிலும் இந்த போதை பொருள் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 3500 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை கடத்திய திமுக மற்றும் விசிக கட்சிகளை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் குறித்து தீவிர விசாரணை செய்யும்போதுதான் அவர்கள் தேச விரோத செயல், ஆயுதம் கடத்தல், தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்பது தெரியும் எனவும் பகிரங்கமாக பேசியிருக்கிறார் எல்.முருகன்.

அதுமட்டுமில்லாது, இந்த போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் பண பரிவர்தனையும் முக்கியமாக பார்க்கப்படுவதாகவும், இதில் யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பது NCBயின் விசாரணையில் தெரியும். போதை பொருள் கடத்தி குற்றம் செய்த குற்றவாளிகளை கைது செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் பேசியிருக்கிறார் எல்.முருகன்.

இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் அதிகமாக போதை பொருள் புழங்குவதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளருக்கு பதிலளித்த எல்.முருகன், திமுக மற்றும் விசிகவின் முன்னாள் உறுப்பினர்கள் கடத்திய போதை பொருட்களை விழிப்புடன் இருந்து குஜராத் சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு பிடித்ததாகவும் கூறியிருக்கிறார்.