பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை கட்சிக்கு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
நான் இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வந்துள்ளேன். மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.
இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் கே.பி.கே செல்வராஜ் பாஜகவில் இணைந்தார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த இவரது அமைப்பில் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்.
என் கட்சி பாஜகவில் என்னுடைய பயணம் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை கட்சியின் தேசிய தலைமை, மாநில தலைமை, கூட்டுத் தலைமை முடிவு செய்யும். நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை. எனவே கட்சி எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் எனது மக்கள் பணிகள் அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த தொகுதியையும் நான் யாரிடமும் கேட்கவில்லை. ஒரு வேளை கட்சி சொன்னால் அந்த பணியில் இணைந்து பங்களிப்பேன் என நான் தெரிவித்திருக்கிறேன். அவர்களும் எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறார்கள் என்றார்.
அப்போது ஒரு நிருபர் காங்கிரஸ் கட்சியில் கன்னியாகுமரி எம்பி சீட் கேட்டு கொடுக்கவில்லை என வெளியே வந்ததாக கூறினீர்கள். ஆனால் அது போல் பாஜகவில் நீங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று சொல்வது நீங்கள் காங்கிரஸிலிருந்து விலகியதற்கு முரணாக இருக்கிறதே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விஜயதாரணி, எந்த முரண்பாடும் இல்லை. நாம் ஒரு கட்சியில் பல ஆண்டுகாலம் பயணிக்கிறோம். அதில் பெண்களுக்கு தலைமை பண்பு இருப்பதாக நம்பாத ஒரு கட்சியிலிருந்து நான் வெளியே வந்திருக்கிறேன். பெண்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பிரதமர் பல விஷயங்களை செய்து வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையும் தனது நடைபயணத்தின் மூலமாக மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியிருக்கிறார். அந்த வகையில் பெண்களுக்கு உண்டான வாய்ப்பு என்பது பெரிய அளவில் பாஜகவில் இருக்கும் என்ற உறுதிபாட்டையும் அண்ணாமலை அளித்திருந்தார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது என்னுடைய அனுபவத்தையும் அரசியல் பயணத்தையும் என் வாழ்க்கை பயணத்தில் உள்ள எல்லா அரசியல் கூறுகளையும் நிச்சயமாக கவனித்தில் கொண்டு என்னை போன்றவர்களை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபடுத்துவார்கள் என நம்பிக்கை உண்டு.
எனவே அவர்கள் எனக்கு தரும் பணி சீரிய பணியாக இருக்கும். அந்த பணிகளில் நான் வெற்றிகளை காண்பதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உண்டு. காங்கிரஸ் மட்டுமில்லை மற்ற கட்சிகளிலிருந்து நிறைய பேர் பாஜகவில் வந்து சேருவார்கள். தற்போது தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு நடைமுறைகள் நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் கட்சியில் இணையும் பணிகள் நடைபெறும்.
நான் வெளியேறியதற்கு கார்த்தி சிதம்பரம் வருத்தப்படுவதில் நியாயம் இருக்கிறது. அவருக்கே நன்றாக தெரியும், நன்கு உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் அங்கீகாரம் தரவில்லை, குறிப்பாக பெண்களுக்கு உரிய அங்கீகாரங்கள் வழங்கப்படவில்லை என்பது அவரை போன்றோருக்கு நன்றாகவே தெரியும். கார்த்தி சிதம்பரம் மட்டுமில்லை, நிறைய பேர் எனக்கு போனிலும் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் வளர்ச்சியை நோக்கி நீங்கள் பாஜகவில் சென்றுள்ளீர்கள். உங்கள் பயணம் முன்னோக்கி செல்லட்டும், தயவு செய்து திரும்பி பார்த்துவிடாதீர்கள் என எங்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் சொல்லியுள்ளார்கள். இவ்வாறு விஜயதாரணி தெரிவித்துள்ளார்.