பாஜக ஊடகப் பிரிவின் செயலாளர் சவுதாமணி திடீர் கைது!

பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக ஊடகப் பிரிவின் செயலாளருமான சவுதாமணி சைபர் கிரைம் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 6 மணியளவில் சவுதாமணியை சென்னையில் கைது செய்த திருச்சி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக நிர்வாகி சவுதாமணி, ஆசிரியை ஆகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். பெண் தொழில் முனைவோராக உள்ளார். இவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி ஏற்கனவே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சௌதாமணியை கைது செய்து, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.