புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை கடிதம்!

சிறுமி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர டிஜிபிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதோடு, முதல்வர் ரங்கசாமிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி ஸ்ரீநிவாஸ், டிஐஜி சின்ஹா, எஸ்எஸ்பி அனிதா ராய், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். துணைநிலை ஆளுநரின் செயலர் அஜித் விஜய் சௌதரி உடன் இருந்தார். விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பது குறித்தும், விசாரணையின் நிலவரம் குறித்தும் துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டறிந்தார். விசாரணையை விரைந்து முடிக்கவும் குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரவும் துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை காவல்துறை முடுக்கி விட வேண்டும் என்றும் அறிவுத்தினார்.

இது தொடர்பாக முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய சிறுமி மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது. இந்த வழக்கில் விரைந்தும் விரிவாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சிறுமிக்கு அஞ்சலி செலுத்த நேற்று சென்றிருந்தபோது இந்த வழக்கை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்திருந்தேன்.

மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணை குழுவிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன். ஒரு சிறப்பு தடயவியல் குழுவின் பங்களிப்பும் இந்த விசாரணையை விரைவுபடுத்த துணையாக இருக்கும். புதுச்சேரி காவல்துறை, இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணையை விரைவுப்படுத்தும். விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று பொது மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பினை ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலமாக நிர்வாகத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும் மக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தி சட்டம்-ஒழுங்கு நிலையை நிலை நாட்ட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குழந்தையின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமிக்கு நியாயம், நீதி கிடைக்க மிக தீவிரமாக இருக்கிறோம். சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டு காவல்துறை அதிகாரி கலைவாணன் நியமிக்கப்பட்டு விசாரணையை துவக்கியுள்ளோம்.
இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும், புகார் வந்தால் தீவிரமாக நடவடிக்கை எடுக்கவும், போதைப்பொருட்களை தீவிரமாக கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். விரைவு நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை செய்து குற்றம் முழுமையாக நிருபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உச்சப்பட்ச தண்டனை தர நடவடிக்கை எடுப்போம். துறைரீதியாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் சொல்லியுள்ளேன்.

முத்தியால்பேட்டை பகுதியில் சமூக விரோத செயல்பாடுகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்தனர். குழந்தை கொலையில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். மேலும் பலருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் புதுச்சேரி பெண்களில் ஒருவராக நிற்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், பெண் குழந்தைகள் சுதந்திரமாக நடமாடவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துவோம். டிஎன்ஏ பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பியுள்ளோம். தடயங்கள் கிடைத்தாலும் சட்டரீதியாக சில ஆதாரங்கள் கிடைத்தபிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். விரைவுப்படுத்துவோம். விரைவு நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும்.

போதைப்பொருள் விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக்-கின் கூட்டாளிகள், புதுச்சேரியில் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து இரும்புக் கரம் கொண்டு அடக்க சொல்லியுள்ளோம். புதுச்சேரியில் உள்ள சில பிரச்சினைகளுக்கு தமிழகத்துடன் தொடர்பு உள்ளது. தமிழக போதைப்பொருள் ஆசாமிகளுக்கு தொடர்புடையோர் இங்குள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பந்த் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதில் அரசியல் ஆதாயம் தேடி ஆர்ப்பாட்டம் செய்வது சரியா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.