பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்!

பெங்களூர் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று குடிநீரை தவறாக பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் சிலிக்கான் நகரமான பெங்களூர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. பெங்களூரில் கடந்த வருடம் முழுக்க போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. அதேபோல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த பற்றாக்குறை நீர்ப்பாசனத்தை பாதித்தது மட்டுமல்லாமல், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் சில பகுதிகளில் குடிநீர் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், பெங்களூர்ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று குடிநீரை தவறாக பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. நகரத்தில் கடுமையான தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில் நிலைமையை அங்கே தண்ணீர் பயன்பாட்டை கண்காணிக்க ஹவுசிங் சொசைட்டிகள் காவலாளியை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

“தி பாம் மெடோஸ்” ஹவுசிங் சொசைட்டி அதன் குடியிருப்பாளர்களுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இது கடந்த சில நாட்களாக பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திடமிருந்து (BWSSB) தண்ணீர் பெறவில்லை. ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் வெகு விரைவில் குறைந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் குடிநீரை தவறாக பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது என்று “தி பாம் மெடோஸ்” ஹவுசிங் சொசைட்டி உத்தரவிட்டுள்ளது.

மழைப்பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பது, நிலத்தடி நீர் குறைதல், உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமை, தண்ணீர் டேங்கர் மாஃபியா எனப் பல காரணங்கள் தற்போதைய தண்ணீர்ப் பிரச்னைக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன. பெங்களூரின் நீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைப்பான பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), காவிரி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரைப் பெறுகிறது. ஆனால் இந்த முறை குறைவான மழையால் காவிரியில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் இணைப்புகள் இல்லாத பகுதிகள் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரை நம்பியே உள்ளன. அவையும் வற்ற தொடங்கி உள்ளன. பெங்களூரில் காவிரியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 1,450 மில்லியன் லிட்டர் (எம்எல்டி) தண்ணீரைப் பெறும் அதே வேளையில், நகரம் இன்னும் ஒரு நாளைக்கு 1,680 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்த பற்றாக்குறைதான் தண்ணீர் பிரச்சனைக்கு பெரிய காரணம்.

தனியார் டேங்கர்கள் இதனால் தண்ணீர் விலையை இருமடங்காக விலை உயர்த்தியுள்ளனர். 1,500 ரூபாய் என்று டேங்கருக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில், தனியார் லாரிகளுக்கு, 6,000 ரூபாய் செலவு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இது வெறும் 700 ரூபாயாக இருந்தது. அங்கே இன்னும் கோடை காலமே தொடங்கவில்லை. அதற்குள் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் பெங்களூரில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக அங்கே இருக்கும் மக்களுக்கு குடிக்க, குளிக்க கூட தண்ணீர் இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர் நகரின் பல பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள், அவை பெரும்பாலும் தண்ணீர் பஞ்சம் காரணமாக மிக அதிகப்படியான தொகையை வசூலிக்கின்றன.