போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாத இறுதியில் டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ.2,000 கோடி எனவும் தெரிய வந்தது. மேலும், ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த நபர் ஒருவரும் இதில் தேடப்பட்டு வருகிறார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 1ஆம் தேதி ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதைப் பொருள் கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த பிள்ளமண்ட் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 30 கிலோ ‘மெத்தம்பெட்டமைன்’ பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கொடுங்கையூரில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து 6 கிலோ மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது. மதுரை, சென்னையில் பறிமுதலான 36 கிலோ போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.180 கோடி என்ற தகவலும் வெளியானது.
போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தி உள்ளோம் என்று ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்றவர்களின் ரூ.18 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 11,306 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் தடுப்பில் இந்திய அளவில் தமிழ்நாடு காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மருந்துகளை போதைப்பொருளாக பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தல் குறைந்துள்ளது என்றும் காவல் துறை உயரதிகாரிகள் இன்றைய பிரஸ் மீட்டில் தெரிவித்துள்ளனர்.
அப்போது ஜாபர் சாதிக்குடன் சங்கர் ஜிவால் இருக்கும் புகைப்படம் குறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது:-
இது என்னுடைய தனிப்பட்ட விஷயம், இருந்தாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். நான் சென்னை காவல் துறை ஆணையராக இருந்த போது நிறைய ஸ்பான்சர்கள் சிசிடிவி கேமராக்களை வழங்கினர். ஒரு 15 ஸ்பான்ஸர்கள் இருந்தனர். அவர்களில் ஜாபர் சாதிக்கும் ஒருவர். 2013 ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மீது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு 2017இல் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நிகழ்ச்சிதான் இது. போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் குற்றவாளி என தெரிந்ததும் அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நீக்கி, அவர்களிடமே திருப்பி கொடுத்து விட்டோம். அதற்கு பதிலாக வேறு 10 சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டோம். மேலும் ஜாபர் சாதிக்கிற்கு நான் கொடுத்தது விருது அல்ல. அது வெறும் பரிசு பொருள்தான். token of appreciation க்காக விருது வழங்கினோம். இவ்வாறு சங்கர் ஜிவால் தெரிவித்தார்.