இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நமது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை ஆரம்பித்தவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி. இந்தியா ஐடி துறையில் சர்வதேச அளவில் வேற லெவலுக்கு செல்ல இன்ஃபோசிஸ் முக்கிய காரணம். நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பிடித்தே வருவார்கள். குறிப்பாக அவர்களின் எளிமை அனைவரையும் வியக்க வைக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி எகானமி கிளாஸில் பயணித்து இருந்தார். அதை அவரது சக பயணி இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி மற்றும் அவரது மகள், பேரக்குழந்தைகள் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வெகு சாதாரணமாகப் பெங்களூரில் உள்ள ஒரு சாலையோர கடையில் புத்தகங்களை வாங்குவதும் இணையத்தில் டிரெண்டானது. இப்படி பலருக்கும் எடுத்துக்காட்டாகவே இவர்கள் உள்ளனர்.
இதற்கிடையே ராஜ்யசபா உறுப்பினராகச் சுதா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்பியாகும் சுதா மூர்த்திக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய குடியரசுத் தலைவர் சுதா மூர்த்தியை ராஜ்யசபாவிற்கு பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூகப் பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது. ராஜ்யசபாவில் அவரது இருப்பு பெண்களின் வலிமையை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் ஆற்றலை இது எடுத்துக்காட்டுகிறது. அவரது நடாளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.