பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது: ராஜேந்திர பாலாஜி!

பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ராஜேந்திர பாலாஜி 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அமைச்சராக இருந்தபோது தடாலடி கருத்துகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் ராஜேந்திர பாலாஜி. “அம்மா என்ற ஆளுமை இல்லாத நேரத்தில் மோடிதான் எங்கள் டாடி. மத்தியில் மோடி ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் தான் எப்போதும் தொடரும். பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாது” என்று பேசி இருந்தார் ராஜேந்திர பாலாஜி. ராஜேந்திர பாலாஜி பேசிய “மோடி எங்கள் டாடி” டயலாக் அரசியல் களம் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் ஆனது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதிமுகவையே மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்து விட்டனர், மோடியே லேடியா எனக் கேட்ட ஜெயலலிதாவின் கட்சியில் இருந்து, ‘மோடி எங்கள் டாடி’ என்ற பேச்சை கேட்கும் நிலை வந்துவிட்டது என விமர்சித்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜியிடம், சமீபகாலமாக அதிமுகவை விட பாஜக செல்வாக்கு பெற்றுவிட்டதாக ஒரு கருத்து பேசப்படுகிறதே, அதை கவனித்தீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவை விட பாஜக வாக்கு வங்கி அதிகமாகி விட்டது என்று மட்டும் இல்லை திமுகவை விட பாஜக வாக்கு வங்கி அதிகமாகி விட்டது என்றும் தான் பேசுகிறார்கள். நல்லா கேட்டுக்கோங்க. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக – அதிமுக. இதுதான் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் எந்த தேசிய கட்சிகளும் ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, அவை திராவிடக் கட்சிகளுடன் கைகோர்த்துத்தான் ஜெயிக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சரி, திமுகவா, அதிமுகவா என்றுதான் முடிவெடுப்பார்கள். இது திராவிட பூமி. ஆகவே இங்கு மாற்று கருத்துகளுக்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து பேசுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, “பிரதமர் மோடி இந்தியாவுக்கே பிரதமர். அவர் இந்தியாவின் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதை நம்மால் தடுக்க முடியாது. அவர் பாஜகவை வளர்க்க முயற்சி எடுக்கிறார். அதில் தவறில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் கிடையாது. அதிமுக கரை வேட்டி கட்டியவன் எல்லா கிராமத்திலும் இருக்கிறான். அதிமுகவை குறைத்து மதிப்பிடுபவர்கள் தேர்தலில் வருத்தப்படுவார்கள். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என பல தலைவர்கள் இங்கு வலுவாக திராவிட சித்தாந்தத்தை வளர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள். எனவே இங்கு மாற்று சித்தாந்தத்துக்கு இடம் கிடையாது.” என்றார்.

மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசுவதன் மூலம் அதிமுக வாக்குகளை கவர்ந்து விடலாம் என பாஜக கணக்கு போடுவதாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, “எம்ஜிஆர் என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி அதிமுக. ஜெயலலிதா என்ற தங்க மங்கை வளர்த்தெடுத்த கட்சி இது. பச்சைத் தமிழரான புரட்சித் தமிழர் எடப்பாடியார் வளர்த்துக் கொண்டிருக்கிற கட்சி அதிமுக. இந்தக் கட்சியில் அண்ணா கை காட்டுகிற கொடியைத் தான் தொண்டர்கள் தூக்கிப் பிடிப்பார்கள். மற்ற கட்சிக்காரர்கள் எங்கள் தலைவர்களை, வழிகாட்டிகளை புகழ்ந்து பேசினால், அது எங்களுக்குதான் பெருமை தானே ஒழிய, இதனால் எங்கள் வாக்குவங்கி தான் கூடுமே ஒழிய, எங்கள் வாக்குகள் குறைய வாய்ப்பே கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.